This Article is From Dec 14, 2019

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்!!

தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் வல்லுனரான பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக உள்ளார். அவரது கட்சி பீகாரில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக தேர்தல் பிரசார வல்லுனர் பிரசாந்த் கிஷோர் உள்ளார்.

New Delhi:

டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரசார வல்லுனர் பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்துடன் ஆம் ஆத்மி கட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, தேர்தல் பிரசார வியூகங்களை பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் வகுத்துக் கொடுக்கும். 

இந்த ஒப்பந்தம் குறித்து, பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில்,'பஞ்சாப் தேர்தல் முடிவுக்கு பின்னர், நாங்கள் மிகவும் சவால் மிகுந்த ஆம் ஆத்மி கட்சியை எதிர்கொண்டோம் என்பதை உணர்ந்தோம். அந்தக் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவத மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
 

கிஷோர் தற்போது ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக உள்ளார். அவரது கட்சியும், பாஜகவும் பீகாரில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன.

குடியுரிமை திருத்த மசோதா விவகாரம் தொடர்பாக பிரசாந்த் கிஷோருக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரசாந்தின் மனைவி அசாமை சேர்ந்தவர் என்பதால், அவர் இந்த மசோதாவால் பாதிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த பிரசாந்த் கிஷோர், 'நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அடிப்படையில் மசோதா நிறைவேறியுள்ளது. இப்போது, நீதித்துறைக்கும் அப்பாற்பட்டு நாட்டின் ஆன்மாவை காப்பாற்றுவது பாஜக அல்லாத 16 முதல்வர்களின் கையில்தான் உள்ளது. அவர்களில் பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளாவை சேர்ந்த 3 முதல்வர்கள் குடியுரிமை திருத்த மசோதாவுக்கும், என்.ஆர்.சி.க்கும் எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். மற்றவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி. ராம் சந்திர பிரசாத் சிங், 'நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. கட்சியை விட்டு யாரேனும் விலக விரும்பினால் விலகிக் கொள்ளலாம்' என்று கூறியுள்ளார். இன்னொரு எம்.பி. ராஜிவ் ரஞ்சன், 'கட்சி தலைவர் முடிவு எடுத்து விட்டார். இனி பின்வாங்கும் பேச்சுக்கு இடமில்லை' என்று தெரிவித்துள்ளார். 

2015-ல் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலின்போது ஐக்கிய ஜனதாதள கட்சியின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் உறுதுணையாக இருந்தார். அந்த நேரத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் நிதிஷ் கூட்டணி அமைந்திருந்தார். இன்று நிதிஷை பிரசாந்த் கிஷோர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 2014-ல் மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடிக்கு பிரசார ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருந்தார். அவரது ஐ-பேக் The Indian Political Action Committee (I-PAC) நிறுவனம், சாய் பர் சர்ச்சா என்ற பிரசாரத்தை மேற்கொண்டது. இந்த பிரசாரம் மோடியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. 

தற்போது இந்த ஐ பேக் நிறுவனம் மேற்கு வங்கத்தில் 2021-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜிக் ஆதரவாக களமிறங்க உள்ளது. மாநிலத்தில் பாஜக எழுச்சி பெற்று வரும் நிலையில், மம்தாவை 3-வது முறையாக முதல்வராக ஐ பேக் தீவிர களப்பணியாற்றுகிறது. 

இதேபோன்று, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் ஐ பேக் நிறுவனம் பணியாற்றியிருக்கிறது. 

.