கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர்.
New Delhi: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பரிவான 370 ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜம்மூ - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
“ஜம்மூ காஷ்மீர் குறித்து மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையை ஆதரிக்கின்றோம். இதன் மூலம் காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும், தொடர்ந்து யூனியன் பிரதேசமாக இருக்கும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி வருகின்றனர். ஆனால், ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதை அவர் ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு சட்டப் பிரிவு 370 மூலம், காஷ்மீருக்கென்று தனியாக சட்ட சாசனம், கொடி, தேசிய பாதுகாப்பைத் தவிர்த்து சட்டம் இயற்றிக் கொள்ளும் உரிமை ஆகியவை கொடுக்கப்பட்டிருந்தன. 1947 ஆம் ஆண்டு காஷ்மீர், இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதற்கு 370 சட்டப் பிரிவு முக்கிய பங்காற்றியது. சட்டப் பிரிவு 370 இருக்கும் வரையில், மத்திய அரசு எந்தச் சட்டம் இயற்றினாலும் அதற்கு ஜம்மூ காஷ்மீர் மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிலை இருந்தது.
கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர். மேலும் மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி மற்றும் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.