This Article is From Feb 25, 2020

டெல்லி வன்முறையில் காவலர் உயிரிழந்தது எப்படி? பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

பிரேத பரிசோதனை முடிவுகளின் படி, அவரின் இடது தோள்பட்டை வழியாக தோட்டா நுழைந்ததாகவும், அதனை வலது தோள்பட்டை வழியாக அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறையில் காவலர் உயிரிழந்தது எப்படி? பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

சிஏஏ போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் ரத்தன் லால் உயிரிழந்துள்ளார்.

New Delhi:

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

முன்னதாக, வன்முறையின் போது நடந்த கல்வீச்சு சம்பவத்திலே ரத்தன் லால் உயரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகளின் படி, அவரின் இடது தோள்பட்டை வழியாக தோட்டா நுழைந்ததாகவும், அதனை வலது தோள்பட்டை வழியாக அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, ரத்தன் லாலின் சடலம் டெல்லியில் உள்ள வீட்டில் ஒப்படைக்கப்படுகிறது. தொடர்ந்து, அங்கிருந்து, லாலின் சொந்த ஊரான ராஜஸ்தானின் பூராரி கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிகிறது. 

இதனிடையே, உயிரிழந்த ரத்தன் லாலின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும், அவரது பெற்றோருக்கு முதியோர் பென்சன் வழங்க கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எந்த உத்தரவாதமும் வழங்கப்படாத பட்சத்தில் ரத்தன் லால் இறுதிசடங்குகள் நடைபெறாது என்று அந்த கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். 

e03pacho

ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த ஊருக்கு ரத்தன் லால் உடல் எடுத்துச்செல்லப்படுகிறது. 

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த இந்த வன்முறை சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பஜன்பூரா, சாந்த்பாக் மற்றும் கார்வால் நகர் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள பல கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கட்டைகளுடனும், கம்பிகளுடனும் வன்முறையாளர்கள் சாலைகளில் தொடர்ந்து வலம் வந்த படி உள்ளனர்.  

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வந்துள்ள இந்த சமயத்தில், விளம்பரத்திற்காக ஒரு சிலரால் திட்டமிட்டே இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது என அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

With input from IANS

.