New Delhi: டெல்லியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, கட்டடத்தில் சிக்கியிருந்த தம்பதியை காவல் துறையினர் துணிச்சலாக காப்பாற்றினர். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் இருக்கும் ஒரு கட்டடத்தில் இன்று காலை 6 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. முதல் மாடியில் ஏற்பட்ட தீயினால், 2 வது மாடியில் இருந்தவர்கள் உடனடியாக கட்டடத்திலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இரண்டாவது மாடியிலிருந்த தம்பதியினர், அவர்களின் பால்கனியில் வந்து உதவிக்காக கூச்சலிட்டு உள்ளனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த மூன்று போலீஸ் கான்ஸ்டெபில்ஸ், 2வது மாடிக்கு மேலே சென்று தம்பதியை கை கொடுத்து தூக்கியுள்ளனர்.
தம்பதியை கை கொடுத்து காவலர்கள் காப்பாற்றிய போது, தீ வேகமாக பரவி வருவது தெரிகிறது. மிகவும் ஆபத்தான சூழலில் தங்கள் உயிரை துச்சமென நினைத்து தம்பதியைக் காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
துணிச்சலாக இருவரையும் காப்பாற்றிய காவலர்கள் கான்ஸ்டெபில் மனோஜ் குமார் மற்றும் அமித் என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி, ‘தீ விபத்தில் 2வது மாடியில் இரண்டு பேர் சிக்கி இருப்பதைப் பார்த்த காவலர்கள், எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக அவர்களை காப்பாற்றினர். அதிலும் அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் போது, அவர் தீயில் விழ இருந்தார். ஆனால், காவலர்கள் சிறப்பாக செயல்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டார்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.