டெல்லியில் மட்டும் 88 நோய்த் தடுப்பு மண்டலங்கள் உள்ளன.
ஹைலைட்ஸ்
- டெல்லியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 635 பேருக்கு கொரோனா பாதிப்பு
- மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது
- நாட்டின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
New Delhi: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 635 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,053 ஆக உள்ளது. அவர்களில் 6,771 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 7,006 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 276 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
முன்னதாக கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 13,418 பேருக்கு டெல்லியில் கொரோனா பாதிப்பு இருந்தது. டெல்லியில் ஒரே நாளில் அதிக பாதிப்பு என்றால், அது கடந்த வெள்ளியன்றுதான் நடந்தது. அன்றைய தினம் 660 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
டெல்லியில் மொத்தம் 1,74,469 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும்.
பாதிக்கப்பட்டவர்களில் 2,053 பேர் சப்தர்ஜங், ராம் மனோகர் லோகியா, எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 187 பேருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 600 பேர் பல்வேறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3,421 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை டெல்லி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 50-க்கும் அதிகமான படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனைகளில். 20 சதவீத படுக்கைகளை கொரோனா பாதித்தோருக்கு ஒதுக்கி வைக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லியில் மட்டும் 88 நோய்த் தடுப்பு மண்டலங்கள் உள்ளன.