கொரோனா இறப்புகளுக்குப் பின்னால் உள்ள காரணிகளை வழங்குக: கெஜ்ரிவால்!
New Delhi: கடந்த இரண்டு வாரங்களில் தேசிய தலைநகரில் நடந்த அனைத்து கொரோனா இறப்புகளுக்கும் பின்னால் உள்ள காரணிகளைப் பற்றிய விரிவான பகுப்பாய்வைப் பகிர்ந்து கொள்ளுமாறு டெல்லி சுகாதார செயலாளருக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுப்பதற்கான நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இதுவரை இந்த நோய் காரணமாக 3,165 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு 120க்கு மேல் உயிரிழந்து வந்த நிலையில், ஜூலை 7ம் தேதி 50 இறப்புகளாக குறைந்துள்ளது.
நோயாளிகளிடமிருந்து கருத்துகளைப் பெறவும், வெளியேறும் நேரத்தில் ரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்று கேட்குமாறு அனைத்து அரசு மற்றும் தனியார் கொரோனா மருத்துவமனைகளுக்கும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் இதுவரை 1,02,831 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக, 25,449 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 74,217 நோயாளிகள் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.