மனிஷ் சிசோடியா ஆம் ஆத்மி அரசின் அனைத்து முக்கிய இலாக்காக்களையும் வைத்திருந்தார்.
New Delhi: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி காலையில் இருந்து முன்னிலையில் இருந்து வந்தாலும், அக்கட்சியின் முக்கிய தலைவரான மனிஷ் சிசோடியா தனது தொகுதியில் பின்னடைவையே சந்தித்து வந்தார். பாஜக வேட்பாளருக்கும் சிசோடியாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் மனிஷ் சிசோடியா வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங் நேகி மற்றும் மனிஷ் சிசோடியா இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட நேரமாக டெல்லி துணை முதல்வரான மனிஷ் சிசோடியா, பாஜக வேட்பாளரிடம் பின்னடைவையே சந்தித்து வந்தார். பின்னர் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளரை விட 200 வாக்குகள் வித்தியாசம் பெற்றார். இதையடுத்து, பிற்பகல் 2 மணிக்கு மேல் இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் இந்த நிலை அப்படியே மாறியது.
இதனிடையே, பாஜகவின் பர்வேஷ் சாஹிப் வர்மா சிசோடியாவை வைத்து ஆம் ஆத்மியை கடுமையாக சாடினார். "கல்வி குறித்து வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டிருந்தால், டெல்லியின் கல்வி அமைச்சர் தோற்றிருக்க மாட்டார்" என்றும் அவர் சிசோடியோவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆம் ஆத்மி கட்சி 52.4 சதவீத வாக்குகளுடன் 62 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில், 39.9 சதவீத வாக்குகளுடன் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியானது, இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.