This Article is From Jan 28, 2020

ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்கார்களை ஒரு மணிநேரத்தில் அகற்றுவோம்: பாஜக எம்.பி.

டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக எம்.பி., பர்வேஷ் வர்மா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் நாட்டின் ஒற்றுமையை முடிவு செய்யும் என்று பர்வேஷ் கூறியுள்ளார்.

New Delhi:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லி ஷாகின்பாக்கில் போராட்டம் நடத்துபவர்களை ஒரு மணிநேரத்தில் அகற்றுவோம் என பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா கூறியுள்ளார். மேலும், போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளிடமும், மகள்களிடமும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவார்கள் என்று சர்ச்சைகுரிய வகையில் பர்வேஷ் விமர்சித்துள்ளார். 

டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக எம்.பி., பர்வேஷ் வர்மா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, டெல்லியில் நடைபெறுவது சாதாரண சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல. இது நாட்டின் ஒற்றுமையை உறுதிபடுத்தும் தேர்தல்.

பிப்.11ம் தேதி டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஷாகின்பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்களை ஒரு மணிநேரத்தில் கலைத்து விடுவோம். சட்டவிரோதமாக செயல்படுபவர்களை வெளியேற்றுவோம். அடுத்த ஒரு மாதத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட ஒரு மசூதியையும் நாங்கள் விடமாட்டோம். 

டெல்லி ஷாகின்பாக் பகுதியில் லட்சக்கணக்காணோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளிடமும், மகள்களிடமும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவார்கள். அதற்கு வாய்ப்புகள் உள்ளது, அப்போது, மோடிஜியும், அமித் ஷாவும் உங்களை காப்பாற்ற வரமாட்டார்கள். 

மேலும், ஷாகின்பாக்கில் போராட்டம் நடத்துபவர்கள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

.