டெல்லி அமைச்சர்களுக்கு இன்றிரவு கெஜ்ரிவால் விருந்து அளிக்கிறார்.
New Delhi: டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் பதவியேற்பு விழா நாளை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றிரவு விருந்து அளிக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது டெல்லியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும், முதலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர்களுடன் கெஜ்ரிவால் விவாதிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் 3 மாதங்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.
டெல்லியை சர்வதேச நகரமாக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை காலை 10 மணிக்கு சக அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பொறுப்பு ஏற்கவுள்ளார்.
டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
பாஜகவுக்கு மீதமுள்ள 8 இடங்கள் கிடைத்தன. தொடர்ந்து 2-வது முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.