Delhi election results 2020: பாஜக தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் - மனோஜ் திவாரி
New Delhi: டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், பாஜகவினர் யாரும் மனம் தளர வேண்டாம் என அக்கட்சியின் டெல்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் திவாரி கூறும்போது, இன்னும் பல சுற்றுகள் எண்ணப்பட வேண்டியுள்ளன. அதனால், பாஜக தொண்டர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். நாம் இப்போதும் நல்ல நிலையிலே இருக்கிறோம். 27 தொகுதிகளில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் 1000 வாக்குகள் வித்தியாசம் தான் உள்ளது என்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு வரை பாஜக வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருந்த பாஜக மூத்த தலைவர் சின்கா, ஆம் ஆத்மி முன்னிலை நிலவரத்தை பார்த்த பின்பு, 40க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருப்பது என்பது சிறந்த ஒன்று. அதனால், ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தான் நினைப்பதாக அவர் கூறினார்.
முன்னதாக, இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் திவாரி, நடந்து முடித்த இந்த 70 தொகுதிகளுக்கான தேர்தலில், பாஜக 48-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்றும் 55 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார்.
பாஜக-வின் தொண்டர்கள் பெறவிருக்கும் இந்த வெற்றியை கொண்டாட ஏற்கனேவே தயாராகிவிட்டார்கள் என்று கூறிய அவர், முடிவு எப்படி இருந்தாலும் யாரும் எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை குறைகூற கூடாது என்றும் தெரிவித்தார். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் டெல்லியில் முதல்வராக மனோஜ் திவாரி தேர்வாக நிறைய வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.