Delhi election results 2020: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கும் நிலையில், மனிஷ் சிசோடியா ஆம் ஆத்மிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
New Delhi: மக்களுக்காக உழைப்பது என்பதே உண்மையான தேசியவாதம் ஆகும் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடக்கம் முதலே ஆம் ஆத்மி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 50 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 17 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மனிஷ் சிசோடியா கூறும்போது, உண்மையான தேசபக்தி என்றால் என்ன என்பதை எங்கள் வெற்றி நிரூபிக்கும் என ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா கூறியுள்ளார். உங்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்காக தான் பணியாற்ற வேண்டும். கல்வி மற்றும் மருத்துவத்திற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு அரசு நேர்மையாக பணியாற்றியுள்ளது என்றால் மீண்டும் அது வெற்றி பெறும். நாங்கள் எப்போதும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் குறித்து தான் பேசி வருகிறோம். ஆனால், மற்றொரு தரப்பினர் இந்து - முஸ்லீம் குறித்தே பேசி வருகின்றனர் என பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்தார்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைச் சுற்றி, குறிப்பாக ஷாகின் பாக் நகரில் "தேச விரோத" கதைகளை வடிவமைப்பதன் மூலம் டெல்லியின் வாக்காளர்களை திசைதிருப்ப பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல பாஜக தலைவர்கள் குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் மீதான தாக்குதல்களுக்கு தங்கள் பிரச்சாரத்தை அர்ப்பணித்தனர், அவர்களை "துரோகிகள்" என்று அழைத்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி தரப்பு கூறி வந்தது.