டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசும் கெஜ்ரிவால்.
New Delhi: 'பாரத மாதாவுக்கான வெற்றி' என்று டெல்லி தேர்தல் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்அதிரடியாக பேசியுள்ளார்.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், 'டெல்லி மக்களே! ஐ லவ் யூ. உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். புதிய ரகமான அரசியலுக்கு இந்த தேர்தல் வெற்றி வித்திட்டுள்ளது. இது பாரத தாய்க்கு கிடைத்த வெற்றி' என்று கூறினார்.
தனது பேச்சில் ஹனுமனையும் குறிப்பிட்ட கெஜ்ரிவால்,'இன்றைக்கு செவ்வாய்க் கிழமை. இது ஹனுமனின் நாள். டெல்லிக்கு ஹனுமன் அருள் பாலித்துள்ளார். ஹனுமனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்' என்று பேசினார்.
டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது ஹனுமனை பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு கெஜ்ரிவால் உரையாற்றினார். இதனை விமர்சித்த பாஜக வெற்றி பெறுவதற்காக இந்துத்துவ அரசியலை கெஜ்ரிவால் கையில் எடுக்கிறார் என்று கூறியது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 7 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
வெற்றியை ஆம் ஆத்மி தொண்டர்கள் நீலம் மற்றும் வெள்ளை பலூன்களை பறக்க விட்டும், இணிப்புகளை பரிமாறியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 'பாரத் மாதாகி ஜெய்' என்ற கோஷம் டெல்லியில் பல்வேறு இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு மனைவி சுனிதாவின் பிறந்த நாள் என்பதால், இரட்டை மகிழ்ச்சியில் கெஜ்ரிவால் காணப்படுகிறார்.
இதுகுறித்த பேசிய அவர், 'இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல. டெல்லி மக்களுடைய வெற்றி. என்னை மகனாக நினைத்த குடும்பத்தினருக்கு கிடைத்த வெற்றி. 24 மணிநேரமும் மின்சார வசதி பெற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கிடைத்த வெற்றி' என்று கூறியுள்ளார்.
இந்திய வருவாய்த்துறை அதிகாரியாக பொறுப்பில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் அந்த பணியை ராஜினமா செய்து விட்டு சமூக ஆர்வலர், ஊழல் எதிர்ப்பாளராக மாறினார். அதைத் தொடர்ந்து அரசியலில் குதித்த கெஜ்ரிவால், தற்போது 3-வது முறையாக முதல்வர் அரியணையில் அமரவிருக்கிறார்.