வீடு வீடாக சென்று பாஜகவினர் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜே.பி. நட்டா வேண்டுகோள் வைத்துள்ளார்.
New Delhi: டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், டெல்லிக்கு வளர்ச்சிதான் தேவை என்றும் விளம்பரம் தேவையில்லை எனவும் பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்துள்ளார்.
டெல்லியில் பாஜக தொண்டர்கள் வீடு வீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு கூறும் பொய்களை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நட்டா தனது ட்விட்டர் பதிவில், 'நாங்கள் டெல்லியில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கெஜ்ரிவால் அரசு இழைத்த கொடுமைகளை மக்களிடம் எடுத்துரைப்போம். கெஜ்ரிவால் அரசு கூறும் பொய்கள், ஊழல் உள்ளிட்டவற்றை மக்களிடம் விளக்குவோம்.
டெல்லிக்கு தேவை வளர்ச்சி. விளம்பரம் டெல்லிக்கு தேவையல்ல' என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேர்தல் தொடர்பாக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் ஜே.பி. நட்டா இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் இரவு வரை நீடிக்கும் என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் மாயூக் கூறியுள்ளார்.
திரி நகர், ஷாலிமார் பாக், புராரி, திமார்பூர், சாந்தனி சவுக், பாபர்பூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த பாஜக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் மொத்தம் 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பிப்ரவரி 8-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 11-ம்தேதி அறிவிக்கப்படவுள்ளன.