தேவையில்லாமல் எந்த தனியார் பள்ளிகளும் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கப்படாது - அரவிந்த் கெஜ்ரிவால்
New Delhi: தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், கடந்த 5 வருடங்களில் தனது அரசு பள்ளி கட்டணங்களை கட்டுக்குள் வைத்திருந்தது போல், தொடர்ந்து கட்டணங்கள் கட்டுக்குள் வைக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, டெல்லியில் நடந்து வருவது 'நேர்மையான அரசின்' ஆட்சி. இதில், பெற்றோர்கள் பள்ளி கட்டணத்தை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை.
தேவையில்லாமல் எந்த தனியார் பள்ளிகளும் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கப்படாது. கடந்த 5 வருடங்களில் பள்ளி கட்டணங்கள் கட்டுக்குள் இருந்தது போல், தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் கெஜ்ரிவால் அரசு, 2015ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தனியார் பள்ளிகளை தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்த அனுமதிக்கவில்லை, மேலும் அது போன்று அதிக கட்டணம் வாங்குவதாக அரசுக்கு தெரியவந்தால், வாங்கிய கட்டணத்தை திருப்பித் தருமாறு அந்த பள்ளிகளை அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2015 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மறுதேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அந்த கட்சி 70 இடங்களில் 67 இடங்களை வென்றது, மீதமுள்ள மூன்று இடங்களை 1998 முதல் 2013வரை ஆட்சியில் இருந்த பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெற்றன.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ம் தேதியும் நடைபெற உள்ளது.