நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.46 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் நாள் தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27 ஆயிரத்தினை கடந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லையென்ற புகார்கள் மேலெழுந்துள்ளன. இந்நிலையில் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில், டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே படுக்கைகள் ஒதுக்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்துள்ளார். நாளை முதல் மூடப்பட்டிருந்த டெல்லியின் எல்லைகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது 10 ஆயிரம் படுக்கைகள் டெல்லி வாசிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை அனைவரும் பயன்படுத்தலாம். அதே போல சிறப்பு சிகிச்சை கொண்ட மருத்துவமனைகளை அனைவரும் பயன்படுத்தலாம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுக்களின் பரிந்துரைகளின்படி இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி அரசு தெரிவிக்கின்றது. மேலும், இம்மாத இறுதிக்குள் 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தற்போது டெல்லி அரசின் கைவசம் உள்ள 9 ஆயிரம் படுக்கைகளில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை அனுமதித்தால் சில நாட்களுக்குள்ளாகவே மொத்த படுக்கைகளும் நிரப்பப்பட்டுவிடும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை படுக்கை வசதிகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டபோது நோயாளிகள் பலர் மருத்துவமனையிலிருந்து திருப்பியனுப்பப்பட்டனர். இதன் காரணமாக மக்களிடத்தில் கெஜ்ரிவால் ஆலோசனையை கேட்டிருந்தார். முன்னதாக மருத்துவமனை ஆய்வகங்கள் அறிகுறியற்றவர்களையும் நோயுள்ளவர்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தது. எனவே, கெஜ்ரிவால் அம்மருத்துவமனைகள் மீது குற்றம்சாட்டியிருந்தார். மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகள் மறைமுகமாக விற்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.