தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்ததேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பலர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக முன்னாள் அதிமுக எம்.பி.கே.சி. பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் பிரிவினைகளுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி ஒன்றாக இணைந்தனர்.
அதன்பின்னர் அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கே.சி.பழனிசாமி தொடந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.