முன்னதாக கால அவகாசத்தை நீடிக்குமாறு நீதிமன்றத்தில் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
ஹைலைட்ஸ்
- குற்றச் செயல்களை குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
- 2021-ல் பணிகள் முடிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்திருந்தது
- பொதுநல வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வருகிறது
New Delhi: டெல்லியில் பதற்றம் நிறைந்த இடங்களில் சிசிடிவி கேமராக்களை உடனடியாக பொருத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு தடுக்கப்படும் என்று நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பணியை உடனடியாக ஆரம்பித்து 3 மாதத்திற்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு ஜி.எஸ். சிஸ்தானி, ஏ.ஜே. பம்பானி ஆகியோர் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் அதற்குப் பின்னர் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
டெல்லி அரசின் நிலைக்குழு பிரதிநிதி ராகுல் மெஹ்ரா, டெல்லியில் பதற்றம் நிறைந்த 44 இடங்களில் 6 ஆயிரத்து 630 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி 2021 மார்ச் 28-க்குள் நிறைவு பெறும் என்று தெரிவித்தார்.
குறிப்பாக ஒப்பந்தப் புள்ளியை நிறைவு செய்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த நீதிமன்றம், 'டெல்லி போலீசார் சிசிடிவி கேமராக்களை பொருத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்' என்று தெரிவித்தது.
அடுத்த கட்டமாக இந்த வழக்கு வரும் ஏப்ரல் 14-ம்தேதி விசாரிக்கப்படவுள்ளது.
டெல்லியில் 2012 டிசம்பர் 16-ம்தேதி நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது. இதன்பின்னர் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிசிடிவி கேமராக்களை காவல் நிலையம், பதற்றம் நிறைந்த இடங்களில் பொருத்துவது, தடயவியல் பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிவிப்பது, பாலியல் குற்றங்களின் தண்டனையை விரைந்து வழங்குவது போன்ற முக்கிய உத்தரவுகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டன.
முன்னதாக தடயவியல் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் ஆகிய உத்தரவுகளை டெல்லி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.