This Article is From Jun 08, 2020

டெல்லி மக்களுக்கு மட்டுமா மருத்துவமனைகள்? – முதல்வர் முடிவுக்கு துணைநிலை கவர்னர் தடை

டெல்லியில் உள்ள அனைவருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள பைஜால், டெல்லியை சாராதவர்கள் என்ற அடிப்படையில் சிகிச்சை யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி மக்களுக்கு மட்டுமா மருத்துவமனைகள்? – முதல்வர் முடிவுக்கு துணைநிலை கவர்னர் தடை

டெல்லி அரசின் முடிவுக்கு காங்கிரசும், பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

New Delhi:

கொரோனாவால் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மக்களுக்கு மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுக்கு டெல்லியின் துணை நிலை கவர்னர் அனில் பைஜால் தடை விதித்திருக்கிறார். டெல்லியில் உள்ள அனைவருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள பைஜால், டெல்லியை சாராதவர்கள் என்ற அடிப்படையில் சிகிச்சை யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.46 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் நாள் தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27 ஆயிரத்தினை கடந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லையென்ற புகார்கள் மேலெழுந்துள்ளன. இந்நிலையில் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில், டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே படுக்கைகள் ஒதுக்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.

தற்போது 10 ஆயிரம் படுக்கைகள் டெல்லி வாசிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை அனைவரும் பயன்படுத்தலாம். அதே போல சிறப்பு சிகிச்சை கொண்ட மருத்துவமனைகளை அனைவரும் பயன்படுத்தலாம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுக்களின் பரிந்துரைகளின்படி இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி அரசு தெரிவிக்கின்றது. மேலும், இம்மாத இறுதிக்குள் 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தற்போது டெல்லி அரசின் கைவசம் உள்ள 9 ஆயிரம் படுக்கைகளில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை அனுமதித்தால் சில நாட்களுக்குள்ளாகவே மொத்த படுக்கைகளும் நிரப்பப்பட்டுவிடும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டெல்லி முதல்வரின் அறிவிப்புக்கு துணை நிலை கவர்னர் அனில் பைஜால் தடை விதித்திருக்கிறார்.

.