டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது.
New Delhi: காற்று மாசுபடுதலின் எதிரொலியாக டெல்லியில் தனியார் வாகனங்களின் பயன்பாட்டிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என சுற்றுச் சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்கள் குறிப்பாக டெல்லியை சுற்றிலும் தற்போது புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையே இதற்கு காரணம்.
இதுதொடர்பாக சுற்றுச் சூழல் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் புரே லால் கூறுகையில், டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரம் அடையாது என்று நம்புவோம். ஆனால் நிலைமை மோசமாகி விட்டால் தனியார் வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பயிர்க்கழிவுகளை எரிப்பதால் வரும் புகை தான் டெல்லியின் காற்று மாசுக்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் தீபாவளி சமயத்தின்போது பட்டாசுகளை வெடிப்பதால் அன்றைக்கு நிலைமை இன்னும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.