This Article is From Jun 18, 2018

டெல்லி ஆளுநர் அலுவலகத்தில் தொடரும் போராட்டம்… அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

கெஜ்ரிவால், தனது சட்டமன்ற சகாக்களுடன் ஆளுநர் அலுவலகக் காத்திருப்பு அறையில் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

ஹைலைட்ஸ்

  • செவ்வாய் கிழமை முதல் கெஜ்ரிவால் உள்ளிருப்புப் போராட்டம் இருந்து வருகிறார்
  • கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு எதிர்கட்சியினர் ஆதரவு
  • இன்றும் தொடர்கிறது உள்ளிருப்புப் போராட்டம்
New Delhi: புது டெல்லியின் ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் கடந்த செவ்வாய் கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரின் சட்டமன்ற சகாக்களும். இதில், டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் ஆகியோர், புதன் கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சத்யேந்திராவின் உடல்நிலை நேற்று மோசமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.

கடந்த செவ்வாய் கிழமை கெஜ்ரிவால் ஆளுநர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அதன் அமைச்சர்களுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகள் ஒத்துழைப்புத் தர மறுக்கிறார்கள். எனவே அவர்களின் 'ஸ்டிரைக்' வாபஸ் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று கவர்னரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கவர்னர், 'முதல்வர் குற்றம் சாட்டுவது போல் எந்த ஸ்டிரைக்கும் நடைபெறவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும்' என்று அறிக்கை வெளியிட்டார்.

இதனால் கோபமடைந்த கெஜ்ரிவால், தனது சட்டமன்ற சகாக்களுடன் ஆளுநர் அலுவலகக் காத்திருப்பு அறையில் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த விஷயம் ஒவ்வொரு நாளும் தேசிய அளவில் விவாதப் பொருக் ஆகி வரும் நிலையில் டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, 'நாங்கள் எந்த வித ஸ்டிரைக்கிலும் ஈடுபடவில்லை. எங்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது' என்று கூறினர். இதற்கு கெஜ்ரிவால் உடனடியாக, 'ஐஏஎஸ் அதிகாரிக்குத் தேவையான உரிய பாதுகாப்பு வழங்கப்படும்' என்று பதிலளித்தார்.

கெஜ்ரிவாலின் இந்தப் போராட்டத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், சிதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல எதிர்க்கட்யினர் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திராவின் உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கெஜ்ரிவால், 'நேற்றிரவு சத்யேந்திராவுக்கு சிறுநீர் கழிப்பதிலும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை தேறியுள்ளது' என்று ட்வீட்டியுள்ளார். உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
.