New Delhi: டெல்லியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த நேபாளத்தைச் சேர்ந்த 39 பெண்கள் தக்க சமயத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில், டெல்லி பெண்கள் கமிஷன் மற்றும் டெல்லி போலீஸ் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்திய சோதனையில் கடத்தப்பட இருந்த பெண்கள் மீட்கப்பட்டனர். நேபாள பெண்கள், ஹ்ரிடே இன் என்ற உணவகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருப்பிடம் குறித்து பெண்கள் கமிஷனுக்கு துப்பு கிடைத்தது. அதையடுத்து, நடத்திய தேடுதல் நடவடிக்கையில் தான் இந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால், ‘பஹர்கஞ்ச் பகுதியில் இருக்கும் ஹ்ரிடே இன் உணவகத்தில் நேபாளத்தைச் சேர்ந்த பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட உளளதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதையடுத்து டெல்லி போலீஸ் உதவியுடன் உணவகத்தை சோதனையிட்டோம். அப்போது 39 நேபாள பெண்கள் வளைகுடா நாட்டுக்குக் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது’ என்ற ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி முதல் டெல்லியில் இதைப் போன்று நடக்கும் மூன்றாவது சம்பவம் இது.