டெல்லி பாஜக தலைவர்கள் மனோஜ் திவாரி, விஜய் கோயல் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார் கபில் மிஷ்ரா.
New Delhi: ஆம் ஆத்மி கட்சியில் அதிருப்தியில் இருந்த முக்கிய நிர்வாகி கபில் மிஷ்ரா இன்று பாஜகவில் இணைந்தார். அவருடன் மகளிர் அணியின் முக்கிய நிர்வாகி ரிச்சா பாண்டேயும் பாஜகவில் சேர்ந்தார்.
அவர்களை பாஜகவின் தேசிய துணைத் தலைவர் ஷியாம் ஜாஜு மற்றும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி உள்ளிட்டோர் வரவேற்றனர். டெல்லியின் பான்ட் மார்க்கில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதுகுறித்து மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜகில் இணைந்திருக்கும் கபில் மிஷ்ரா மற்றும் ரிச்சா பாண்டேவை வரவேற்கிறேன். அவர்கள் பிரதமர் மோடியின் கொள்கைகளை, தீன தயாள் உபாத்யாயா மற்றும் சியாம பிரசாத் முகர்ஜியின் தத்துவங்களை பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலின்போது ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த கபில் மிஷ்ரா பாஜகவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் அவரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் நடவடிக்கை எடுத்தார். இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கபில் மிஷ்ரா வழக்குத் தொடர்ந்துள்ளார்.