This Article is From Feb 26, 2020

டெல்லி வன்முறை எதிரொலி: 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

வடகிழக்கு டெல்லியில் வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் மட்டும் நடைபெற இருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை சிபிஎஸ்இ வாரியம் தள்ளிவைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது (File)

ஹைலைட்ஸ்

  • டெல்லி வடகிழக்கு பகுதியில் 3 நாட்களாக தொடரும் வன்முறை
  • இந்த வன்முறை சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு
New Delhi:

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்திற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பகுதிகளிலே இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. 

சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த இந்த வன்முறையில் பல்வேறு கட்டிடங்களுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த ஒரு சில பகுதிகளில் இன்னும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை சிபிஎஸ்இ வாரியம் தள்ளிவைத்துள்ளது. இதனிடையே, நேற்றிரவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், டெல்லி துணை ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

முன்னதாக, உள்துறை அமைச்சகம் நிலவரம் கட்டுபாட்டுக்குள் உள்ளதாக தெரிவித்த மறுநாளே மீண்டும் வன்முறை சம்பங்கள் நிகழ்ந்தன. இத்தனைக்கும், சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தும் இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 முறை வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே, வன்முறை பெரிதாக முக்கிய காரணம் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறிதாக தகவல்கள் வெளியானது. அது தொடர்பாக டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் உள்துறை அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகாத்மா காந்தியின் நினைவுச்சின்னமான ராஜ்காட்டில் பிரார்த்தனை செய்வதைக் காண முடிந்தது. தொடர்ந்து, அவர் வன்முறையைத் தவிர்க்குமாறு மக்களை வலியுறுத்தியதுடன், கோயில்களையும் மசூதிகளையும் அமைதிக்கான அழைப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

வகுப்புவாத கருத்துகளை பேசும் வரலாற்றை கொண்ட உள்ளூர் பாஜக தலைவரான கபில் மிஸ்ரா, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிஏஏவுக்கு ஆதரவான பேரணிக்கு தலைமை தாங்கினார். அப்போது, ஜாப்ராபாத் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால் காவல்துறையினர் பேச்சை நாங்கள் கேட்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்தே, பல்வேறு வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. 

இதனிடையை, டெல்லியில் இன்று அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 
 

With input from PTI

.