This Article is From Feb 28, 2020

ஆம் ஆத்மியின் தாஹிர் உசேன் மீது டெல்லி போலீசார் கொலை வழக்குப்பதிவு!!

சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தாஹிர் உசேன், கும்பலில் கற்கள் தன்னை நோக்கித்தான் வீசப்பட்டது என்றும், தான் தாக்குபவன் அல்ல; தாக்குதலுக்கு ஆளானவன் என்றும் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மியின் தாஹிர் உசேன் மீது டெல்லி போலீசார் கொலை வழக்குப்பதிவு!!

தனது வீட்டை முற்றுகையிட்டவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முயன்றதாக உசேன் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • டெல்லி வன்முறைக்கிடையே உளவுத்துறை அதிகாரி அங்கித் சடலமாக மீட்கப்பட்டார்
  • உளவுத்துறை அதிகாரியை ஆம் ஆத்மியின் தாஹிர் உசேன் கொலை செய்ததாக புகார்
  • தன் மீதான குற்றச்சாட்டை தாஹிர் உசேன் மறுத்துள்ளார்.
New Delhi:

உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உயிரிழந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தாஹிர் உசேனுக்கு தொடர்பிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று மாலை தாஹிர் மீது டெல்லி போலீசார் கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளனர். 

வடகிழக்கு பகுதியில் நடந்த கலவரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் உடல் ஜாப்ராபாத் பகுதியில் அங்கித் சர்மாவின் வீட்டின் அருகே உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரியான அவரது தந்தை ரவீந்தர் சர்மா, ஆம் ஆத்மி பிரமுகர் தாஹீர் உசேனின் ஆதரவாளர்களே தனது மகனைக் கொன்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது மகன் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, அங்கித் சர்மாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அங்கித் சர்மாவின் உறவினர்கள் என்டிடிவியிடம் கூறியதாவது, தாஹீர் உசேனுக்கு சொந்தமான 5 மாடிக் கட்டிடத்தில் கற்களும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். 

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவர்கள் ஒரு சில வீடியோக்களையும் என்டிடிவிக்கு பகிர்ந்துள்ளனர். அதில், இருப்பது நகராட்சி கவுன்சிலர் தாஹீர் உசேன் என நம்பப்படுகிறது, அவர் கட்டிடத்தின் மேற்பகுதியில் ஒரு சிலருடன் நின்ற படி, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடுகிறார். ஒரு சில வீடியோக்களில் அவர் கையில் லத்தியுடனும் இருக்கிறார். 

இந்த மோதலில் உசேனின் வீட்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், அந்த கட்டிடத்தின் கீழ்ப் பகுதியிலிருந்த கரும்புகை வெளியேறுகிறது. 

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து ஆம் ஆத்மி பிரமுகர் தனது ட்வீட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், என்னைப் பற்றி வெளிவரும் செய்திகள் தவறானது. கபில் மிஸ்ராவின் வெறுக்கத்தக்கப் பேச்சுக்குப் பின்னரே, டெல்லியில் நிலைமை மோசமடைந்துள்ளது, 

நேற்று முன்தினம் எனது இல்லத்திலும் கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது என்கிறார். மேலும், என் மீது தாக்குதல் நிகழ்த்த எனது வீட்டை உடைத்து அவர்கள் உள்ளே வர முயன்றனர். நான் வீட்டின் மேல்பகுதிக்குச் சென்றுவிட்டதால் அவர்கள் அங்கேயும் வர முயன்றார்கள். 

நான் சம்பவம் குறித்து போலீசாரிடம் விவரித்து எனக்குப் பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டேன். ஆனால், போலீசார் வருவதற்குத் தாமதமானது. அப்போது, வன்முறையாளர்கள் கலைந்து சென்ற பிறகும் எனக்குப் பாதுகாப்பு வழங்கும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டேன். 

எனினும், அவர்கள் சிறிது நேரம் பாதுகாப்பு அளித்துத் திரும்பிவிட்டனர். அப்போது, வன்முறையாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றனர். நடந்த இந்த சம்பவத்தால் நான் மிகவும் மனமுடைந்துள்ளேன். நான் அமைதியைக் கடைப்பிடிக்கும் ஓர் இந்திய முஸ்லிம். எப்போதும், நாட்டிற்காகவும், இந்து முஸ்லிம் உறவுகளுக்காகவும் உழைப்பவன். என்னை நம்புங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில் இன்று மாலை அவர் மீது டெல்லி போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர். 

.