டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் 53 பேர் உயிரிழந்துள்ளனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
- டெல்லி வன்முறை வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
- முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு மாத காலம் வழக்கை ஒத்திவைத்தது.
New Delhi: டெல்லியில் வன்முறை ஏற்பட்டதற்குக் காரணமாகக் கூறப்படும் வெறுப்பைத் தூண்டிய பேச்சுகள் மீதான புகார் குறித்து, வெள்ளியன்று உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
பாஜக தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட டெல்லி வன்முறை சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை நீண்ட நாட்களுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து இருப்பது தேவையற்றது என்று கூறிய உச்ச நீதிமன்றம் டெல்லி வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால் உச்சநீதிமன்றம் இந்த மனுக்கள் மீது தலையிடாது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை இப்படி நீண்ட நாட்களுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து இருப்பது தேவையற்றது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.
நீதியின் நலனுக்காக, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் வெள்ளிக்கிழமை வழக்குகள் பட்டியலிடப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம் என்று கூறிய நீதிபதி போப்டே, வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலீசார் பதிலளிக்க ஒருமாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அனுராக் தாகூர் மற்றும் அபே வர்மா உள்ளிட்டோரின் வெறுப்பு பேச்சே டெல்லியில் 4 நாட்கள் கலவரம் ஏற்பட முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் கடந்த வாரம் நடந்த வன்முறை குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஹரிசங்கர் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.