பாஜக தலைவர் கபில் மிஸ்ரா வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
ஹைலைட்ஸ்
- கொலையாளி தாஹிர் உசேன் தான் - கபில் மிஸ்ரா
- டெல்லி வன்முறை ஏற்பட முக்கிய காரணம் கபில் மிஸ்ராவே என குற்றச்சாட்டு
- உயிரிழப்பு எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
New Delhi: டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஈடுபட்டுள்ளதாக பாஜக தலைவர்கபில் மிஸ்ரா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் நடந்த கலவரத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தலைவர் கபில் மிஸ்ரா நடத்திய பேரணியே இந்த வன்முறை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு கபில் மிஸ்ரா அளித்த பேட்டியில், உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மாவின் கொலையில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கெஜ்ரிவால் கட்சியைச் சேர்ந்த தாஹிர் உசேனின் அலைப்பேசி உரையாடல்களைக் கேட்டாலே, இந்த கொலையில் மேலும், இரு தலைவர்களின் பங்களிப்பு இருப்பதும் வெளியில் வரும்.
டெல்லி வன்முறையின் போது, உசேன் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார் என்ற விவரங்கள் வெளிவந்தால் கூட இந்த கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களில் சஞ்சய் சிங் மற்றும் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருப்பது தெரிய வரும் என்றார். மேலும், உறுதிசெய்யப்படாத சில வீடியோக்களில், வன்முறை நடந்த சமயத்தில் சர்மாவின் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தின் மேற்பகுதியில் உசேன் நிற்பது போல் தெரிகிறது.
இதுதொடர்பாக கபில் மிஸ்ரா மேலும் கூறும்போது, நிச்சயம் ஹூசேன் தான் கொலையாளி. சில வீடியோக்களில் தாஹிர் உசேன் முகமூடி அணிந்தபடி பலருடன் சேர்ந்துகொண்டு கற்களை வீசுவதும், பெட்ரோல் குண்டுகளை எரிவதுமாக இருப்பதைக் காணலாம். தொடர்ந்து, அப்போது அவர் ஆம் ஆத்மி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
"நாட்டைப் பிளவுபடுத்துவதைப் பற்றிப் பேசும் மக்களிடமோ அல்லது மொட்டை மாடியிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசுபவர்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை. ஆனால் 35 லட்சம் பேருக்குச் சிரமமாக இருந்ததால் அந்த சாலைகளிலிருந்து மட்டுமே அகற்றப்பட வேண்டும் என்று கோரிய ஒருவர் பயங்கரவாதி என்று அழைக்கப்படுகிறார், "என்று மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வடகிழக்கு பகுதியில் நடந்த கலவரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் உடல் ஜாப்ராபாத் பகுதியில் அங்கித் சர்மாவின் வீட்டின் அருகே உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரியான அவரது தந்தை ரவீந்தர் சர்மா, ஆம் ஆத்மி பிரமுகர் தாஹீர் உசேனின் ஆதரவாளர்களே தனது மகனைக் கொன்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது மகன் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, டெல்லியில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக தலைவர் 'கபில் மிஷ்ரா உள்ளிட்டோரின் வெறுப்பைத் தூண்டும் பேச்சை கேட்ட பின்பே நீதிமன்றம் இந்த உத்தரவுகளை வழங்கியது. பாஜக தலைவர்கள் பேசியது தொடர்பாக வீடியோ காட்சிகள் நீதிமன்ற அறையிலே நீதிபதிகள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அன்று நள்ளிரவிலே பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.