Delhi Violence: இந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- வடகிழக்கு பகுதியில் பெரும் வன்முறை ஏற்பட்டது.
- பக்கத்து கட்டிட சுவற்றில் கயிறு கட்டி பள்ளிக்குள் புகுந்துள்ளனர்.
- பள்ளியில் இருந்த அனைத்து பொருட்களையும் எரித்துள்ளனர்.
New Delhi: டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட பெரும் கலவரத்தில் வன்முறையாளர்கள் ஷிவ் விஹாரில் உள்ள பள்ளியையும் முழுமையாகச் சேதப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் புத்தகங்களை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு அங்கிருந்த படியே அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ஷிவ் விஹாரில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் டிஆர்பி கான்வென்ட் பள்ளியின் நிர்வாகத் தலைவர் தர்மேஷ் சர்மா கூறும்போது, திங்கட்கிழமையன்று, வன்முறையாளர்கள் அருகில் உள்ள கட்டிடத்திலிருந்து கயிறுகளைக் கட்டி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். தொடர்ந்து, பள்ளியிலிருந்த கரும்பலகை, மேஜை, நாற்காலிகள், நூலகங்கள் என அனைத்திற்கும் தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்பாக மாணவர்கள் தங்கள் தேர்வுகளை முடித்துவிட்டு பள்ளியிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார். தொடர்ந்து, 24 மணி நேரமாகப் பள்ளி பற்றி எரிந்துள்ளது என்கிறார் சர்மா. தீயணைப்பு வாகனங்கள் எதுவும் வரவில்லை என்கிறார். மேலும், தீயணைப்பு படையினரையும் வரவிடாமல் தடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சர்மா கூறினார். 3 நாட்களுக்குப் பின்பே போலீசாரால் இங்கு வர முடிந்தது. அவர்கள் நேற்று மாலை தான் இங்கு வந்தனர் என்றார்.
திங்கட்கிழமையன்று தீ வைத்து எரிக்கப்பட்ட டெல்லி டிஆர்பி கான்வென்ட் பள்ளி.
இந்த டிஆர்பி கான்வென்ட் பள்ளிக்கு அருகில் உள்ள ராஜ்தானி பள்ளியில் தான் முதலில் தாக்குதல் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் குறித்து, பள்ளியிலிருந்த பணியாளர்கள் இரண்டு பேர் கூறும்போது, பள்ளி வளாகத்திலே தாங்கள் அடைத்து வைக்கப்பட்டதாகவும், 2 நாட்களுக்குப் பின்னர் புதன்கிழமையன்றே போலீசார் அவர்களை மீட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் பள்ளியில் பாதுகாவலராக பணிபுரியும் மனோஜூம், ராஜ்குமாரும் ஆவார்கள். இதில் ராஜ்குமார் குடும்பத்துடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் எங்களைக் கடுமையாகத் தாக்கினர், குழந்தைகளையும் அடிக்க முற்பட்டனர். நாங்கள் சாப்பிடுவதற்கு எதையும் விட்டுவைக்காமல் சென்றுவிட்டனர் என்று கண்ணீருடன் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
தரையில் கிழித்து வீசப்பட்டுக் கிடக்கும் காகிதங்கள் மற்றும் புத்தகங்கள்
இதுதொடர்பாக பள்ளியின் உரிமையாளர் ராஜ்தானி என்டிடிவியிடம் கூறும்போது, திங்கட்கிழமையன்று பள்ளி கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியிலிருந்த அனைத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கியதுடன், தீவைத்து எரித்தும் உள்ளனர். நாங்கள் காவல்துறைக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றார்.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் அடுத்தடுத்து வளர்ந்து, பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் வன்முறையாளர்களால் வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள் தீ வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. கடந்த 5 நாட்களில் மட்டும் கலவரம் காரணமாக இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர்.
ராஜ்தானி பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காவலர், சுமார் 40 மணி நேரத்திற்குப் பின்பு மீட்கப்பட்டுள்ளார்..
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள 3 பள்ளிகள் வன்முறையாளர்களால் குறி வைக்கப்பட்டுள்ளது. பிரிஜூபுரியில் உள்ள 3000 மாணவர்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளியிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீ வைக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாகப் பள்ளியில் தேர்வு நடந்ததால் மாணவர்கள் தேர்வை முடித்து முன்னதாக கிளம்பிச் சென்றுவிட்டனர்.