Delhi violence: நான்காவது நாளாக வடகிழக்கு பகுதியில் நீடிக்கும் பதற்றம் (File)
ஹைலைட்ஸ்
- டெல்லி வன்முறையில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஒரு சில பகுதியில் நள்ளிரவில் மீண்டும் மோதல் போக்கு
- நான்காவது நாளாக நீடிக்கும் பதற்றம்
New Delhi: டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்திற்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியின் பஜான்புரா, மவுஜ்பூர் மற்றும் கரவால் நகர் பகுதிகளிலிருந்து நேற்று நள்ளிரவில் தீ விபத்து மற்றும் அமைதியின்மை பற்றிய தகவல்கள் வெளிவந்தன. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைநகரில் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அரசு அமைதியை மீட்டெடுக்கும் என்று தனிப்பட்ட உத்தரவாதங்களை வழங்கிய சில மணி நேரங்களில் மீண்டும் அமைதியின்மை புகார்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து முதன்முறையாகக் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, சகோதர, சகோதரிகளை டெல்லியில் அமைதியை நிலை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அடுத்தடுத்து பலமுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாலும், வன்முறையைக் கட்டுக்குள் வைக்கத் தவறியதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 18 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, டெல்லியில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக தலைவர் 'கபில் மிஷ்ரா உள்ளிட்டோரின் வெறுப்பைத் தூண்டும் பேச்சைக் கேட்ட பின்பே நீதிமன்றம் இந்த உத்தரவுகளை வழங்கியது. பாஜக தலைவர்கள் பேசியது தொடர்பாக வீடியோ காட்சிகள் நீதிமன்ற அறையிலே நீதிபதிகள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1984-ல் ஏற்பட்ட சீக்கிய கலவரத்தைப் போன்றதென்று மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் அச்சம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி காவல் ஆணையர் இந்த வீடியோக்கள் குறித்து ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைநகரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு முறையாக நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான ஜாஃபராபாத் பகுதியைப் பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்ஷா அல்லா, இங்கு அமைதி நிலவும் என்று கூறினார். இதற்கு முன்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சை அவர் எதிர்கொண்டார். அந்த பெண்ணிடம் என் வார்த்தையை உங்களுக்கு உறுதியாகத் தருகிறேன் என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பா முதன்முறையாகக் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அமைதியும், நல்லிணக்கமும்தான் நம்முடைய பண்பாடு. டெல்லியில் அமைதியை நிலை நிறுத்துமாறு நான் என் சகோதர சகோதரிகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதி விரைவில் டெல்லியில் அமைதியைக் கொண்டுவருவது என்பது மிகவும் அவசியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்துக்களோ, இஸ்லாமியர்களோ இந்த வன்முறையால் யாரும் பலன் பெறப்போவதில்லை. தற்போது, டெல்லி வசம் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று மக்கள் அனைவரும் ஒன்று கூடி நிலைமையைச் சரி செய்ய உதவலாம், மற்றொன்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு கொன்று குவிக்கலாம். ராணுவத்திற்கு அழைக்க வலியுறுத்தியும் இதுவரை உள்துறை அமைச்சர் அதனை மேற்கொள்ள மறுத்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.