ஃப்ராங்க்பர்ட் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
ஹைலைட்ஸ்
- வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- பல வெளிநாடுகளில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது
- இந்தியர்களுடன் வெளிநாட்டினரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
New Delhi: டெல்லியில் நடந்த வன்முறையைக் கண்டித்து ஐரோப்பாவில் பாரீஸ், லண்டன் உள்ளிட்ட 18 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் நடந்த வன்முறையில் மொத்தம் 46 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 23-ம்தேதி தொடங்கிய கலவரம் 26-ம்தேதி வரையில் நடந்தது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே டெல்லியில் வன்முறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இந்தியாவுக்கு வந்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இதற்குப் பொறுப்பு ஏற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். பாஜக தலைவர்கள் பேசிய சர்ச்சைப் பேச்சுக்கள்தான் வன்முறைக்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின்போது இந்தியத் தூதரகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, போலீசார் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியத் தூதரகத்தின் முன்பு மலர்கள் வைக்கப்பட்டன.
பெல்ஜியத்தில் மிக மோசமான வானிலை காணப்பட்டபோதிலும் போராட்டக்காரர்கள் கிளாஸ்கோ நகரில் கூடி போராட்டம் நடத்தினர்.
கிராக்கோ நகரில் போராட்டக்காரர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து வந்திருந்தனர். இதில் பல்வேறு மத, சமயங்களைச் சேர்ந்த இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
'டெல்லியில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. வெறுப்பைத் தூண்டும், பிரிவினையை ஏற்படுத்தும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்கவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்' என்று இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் கூறினார்.
நெதர்லாந்தில் போராட்ட முழக்கங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுப்பப்பட்டன. ஷாகின் பாக் போராட்டத்தை மரியாதை தெரிவித்து உரை நிகழ்த்தப்பட்டது. மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
பாரீஸில், பிரெஞ்சு குடிமக்கள் இந்தியர்களுடன் சேர்ந்த மவுன அஞ்சலி செலுத்தினர். அவர்கள் வெள்ளை ரோஜாவைத் தூதரகத்தின் அருகே வைத்து தங்களது இரங்கலை வெளிப்படுத்தினர். ஐரோப்பாவில் பாசிச எதிர்ப்பின் அடையாளமாக வெள்ளை ரோஜா கருதப்படுகிறது.