"“எனது மகன் இறந்துவிட்டான். அவனுக்கு 15 வயதுதான் ஆனது. நான் ரிக்ஷா ஓட்டுகிறேன்"
ஹைலைட்ஸ்
- டெல்லி கலவரங்களால் 42 பேர் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
- 4 நாட்களாக தொடர்ந்து கலவரங்கள் நடந்தன
- தற்போது நிலைமை சற்று சீராகியுள்ளது
தலைநகர் டெல்லியில் 4 நாட்களுக்கு நடந்த கொடூர கலவரங்களால் 42 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளைவிட மிகக் கொடுமையானது, இறந்தவர்களின் உடலைச் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுப்பதில் பெரும் காலதாமதம் இருப்பதே. தங்களின் உற்றார், உறவினர்களை இழந்த குடும்பங்கள், மருத்துவமனைகளுக்கு வெளியே அவர்களின் உடல்களைப் பெற்றுச் செல்வதற்காகக் காத்துக் கிடக்கும் அவலம் நடந்தேறி வருகிறது.
இந்த சம்பவங்களின் உச்சபட்ச கொடூரமாக, ஒரு ரிக்ஷா ஓட்டுநர் தனது மகனின் உடலைப் பெற 72 மணி நேரமாகப் போராடி வருகிறார்.
“எனது மகன் இறந்துவிட்டான். அவனுக்கு 15 வயதுதான் ஆனது. நான் ரிக்ஷா ஓட்டுகிறேன். எனது குழந்தைக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்து வந்தேன். என் இரண்டு குழந்தைகளின் ஒருவன் இப்போது இல்லை.
எனது மகனின் உடலையாவது வாங்கிச் செல்லலாம் என்று மருத்துவமனையில் காத்திருக்கிறேன். அதைக் கூட என்னால் செய்ய முடியவில்லை. அவனின் உடலைப் பெறத் தினமும் தினம் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறேன். அவன் பெயர் நித்தின் குமார்” எனக் கதறுகிறார் ரிக்ஷா ஓட்டுநரான ராம் சுவாரத் பஸ்வான்.
அந்த ரிக்ஷா ஓட்டுநருக்கு மட்டுமல்ல, பலரது நிலைமை இப்படித்தான் கவலைக்கிடமாக உள்ளது.
“4 நாட்களாக நாங்கள் இறந்தவர்களின் உடலை வாங்கக் காத்திருக்கிறோம். நாங்கள் தினம் தினம் மருத்துவமனைக்கு வருகிறோம். ஆனால், விசாரணை செய்யும் அதிகாரிக்காக மருத்துவமனைக்கு வந்தாலும் காக்க வைக்கிறார்கள்” என இன்னொருவர் ஆதங்கப்படுகிறார்.
கலவரங்களைத் தொடர்ந்து பலரும் காணாமல் போயுள்ளனர். அவர்களையும் குடும்பத்தினர் பலர் தேடி வருகின்றனர். மருத்துவமனை மருத்துவமனையாக தங்களது உறவுகளைத் தேடி மக்கள் அலைந்து வருகிறார்கள்.