This Article is From Mar 03, 2020

பிரதமரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி! 10 Points

டெல்லியில் 3 நாட்கள் வன்முறை தீப்பற்றி எரிந்தபோது, மத்திய அரசு உறங்கிக் கொண்டிருந்ததா என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி! 10 Points

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி ஏப்ரல் 3-ம்தேதியுடன் முடிகிறது.

ஹைலைட்ஸ்

  • மோடி, அமித் ஷா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளி
  • நாடாளுமன்றத்திற்கு வெளியேவும் போராட்டம் நடைபெற்றது
  • அடுத்து வரும் நாட்களில் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
New Delhi:

டெல்லி கலவரத்திற்குப் பொறுப்பு ஏற்றுப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்தில் இவ்வாறு வலியுறுத்துவது பொருத்தமற்றது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இறுதியாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

மாநிலங்களவையிலும் திமுக, இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் அமளி செய்ததால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் நடந்தவை குறித்த 10 முக்கிய தகவல்கள்

1. டெல்லி கலவரத்தில் 46 பேர் உயிரிழந்தது தொடர்பாக அவையில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவையிலும் நோட்டீஸ் அளித்தனர். 

2. டெல்லியில் 3 நாட்கள் வன்முறை தீப்பற்றி எரிந்தபோது, மத்திய அரசு உறங்கிக் கொண்டிருந்ததா என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

3. மாநிலங்களவையில் தலைவர் வெங்கையா நாயுடு, முதலில் இயல்பு நிலை திரும்புவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பின்னர் விவாதித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

4. டெல்லி கலவரம் குறித்து நாடாளுமன்றம் கேட்டுக் கொண்டால் மட்டுமே உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5. நாடாளுமன்றத்தில் காந்தி சிலை அருகே காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தனித்தனியே போராட்டம் நடத்தினர். அவர்கள் டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். 

6. திரிணாமூல் எம்.பி.க்கள் மஹுவா மித்ரா, சுகேந்து சேகர் ராய் ஆகியோர் காந்தியின் 3 குரங்கு பொம்மை வடிவில் கண்களை கறுப்புத்துணியால் மூடிக்கொண்டும், வாயை விரல்களால் பொத்திக் கொண்டும் போராட்டம் நடத்தினர். 

7. காங்கிரஸின் ராகுல் காந்தி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, சசி தரூர் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

8. ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், பகவந்த் மன், என்.டி.குப்தா, சுஷி குப்தா ஆகியோர் பாஜகவை 'மூர்தாபாத்' என்று கூறி கோஷமிட்டனர்.

9. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 3 வாரங்கள் கழித்து இன்று தொடங்கியது. ஏப்ரல் 3-ம்தேதி இந்த கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது.

10. அடுத்துவரும் நாட்களில் மத்திய அரசு வாடகைத்தாய் மசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.