Delhi Violence: "அவர்களைத் தொட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன் எங்களை எதிர்கொள்ள வேண்டும். எங்களைத் தாண்டி தான் அவர்களை நெருங்க முடியும்!"
ஹைலைட்ஸ்
- டெல்லி கலவரம் குறித்து முன்னதாக எச்.ராஜா பேசியிருந்தார்
- அதற்குத்தான் சீமான் பதிலடி கொடுக்கும் விதத்தில் அறிக்கை வெளியிட்டார்
- 'தமிழகத்தில் உங்கள் எண்ணம் பலிக்காது'- சீமான்
Delhi Violence: டெல்லியில் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு மத்தியில் நடந்து வரும் கலவரச் சம்பவங்களால் மணிக்கு மணி பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தரப்பு மற்றும் எச்.ராஜா உள்ளிட்டோரைச் சூசகமாக எச்சரித்துள்ளார்.
டெல்லி வன்முறைகள் தொடர்பாகச் சீமான், “மாணவர்கள் மீது குண்டு விழும் என்றார்கள். சீமான் கறி கிடைக்கும் என்றார்கள். இப்போது, டெல்லியில் நடந்தது போலத் தமிழகத்திலும் நடக்கும் என்கிறார்கள். சனநாயக வழியிலான அமைதியான அறப்போராட்டத்திற்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.
கை கால்களோடு மட்டுமல்ல வாளோடும் வேலோடும் முன் தோன்றிய மூத்தக்குடியின் மக்கள் நாங்கள்!
நினைத்ததையெல்லாம் செய்து முடித்து கலவரம் செய்து ஆட்டம் போட இது வடநாடு அல்ல; தமிழ்நாடு!
எங்களது பெருந்தன்மையும், பொறுமையும்தான் உங்களது இருப்பை நிலைகொள்ளச் செய்திருக்கிறது!
இங்கிருக்கும் இசுலாமியச் சொந்தங்கள் எங்கோ இருந்து வந்தவர்களல்ல: காலங்காலமாக நீடித்துநிலைத்து வாழும் இம்மண்ணின் பூர்வக்குடிகள்! எங்கள் உடன்பிறந்தவர்கள்; எங்களது இரத்த உறவுகள்! இசுலாமியர்கள் தமிழர்களாகவில்லை. தமிழர்கள் நாங்கள்தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம்.
அவர்களைத் தொட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன் எங்களை எதிர்கொள்ள வேண்டும். எங்களைத் தாண்டி தான் அவர்களை நெருங்க முடியும்!
கவனம்!
நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு!
இது ஊளையிட்டுக்கொண்டே வேற வருதா?!” என்று காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, “கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும்,” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.