4-வது நாளாக டெல்லியில் வன்முறை இன்றும் தொடர்கிறது.
ஹைலைட்ஸ்
- டெல்லி வன்முறை தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
- அவசர வழக்காக எடுத்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது
- காயமடைந்தவர்களை பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவு
New Delhi: 1984-ல் ஏற்பட்ட சீக்கிய கலவரம் போன்ற ஒன்று மீண்டும் நடந்து விடக் கூடாது என்று டெல்லியில் நடக்கும் வன்முறையைச் சுட்டிக்காட்டி டெல்லி உயர் நீதிமன்றம் அச்சம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வன்முறையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உளவுத்துறை அதிகாரி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 180-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
டெல்லி வன்முறையின்போது காயம் அடைந்தவர்களை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறியதாவது-
கடந்த 1984-ல் சீக்கிய வன்முறை நடந்தது. அதேபோன்ற ஒன்று மீண்டும் இந்த டெல்லியில் நடப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. உளவுத்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக நாங்கள் கேள்விப் பட்டுள்ளோம். எனவே இந்த விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காயம்பட்டவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்து அவர்களை மருத்துவமனையில் போலீசார் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.