ரயில் மோதி விபத்து தாய், சகோதரிகள் பலி: கண்ணீருடன் தண்டவாளத்தில் ஒரு வயது குழந்தை!
New Delhi: டெல்லியில் ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் உயிரிழந்து சடலமாக கிடந்ததை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அப்போது அவர்களுக்கு மேலும், அதிர்ச்சியாக துண்டான உடல்களுக்கு அருகில் விபத்தில் தப்பிய குழந்தை கண்ணீருடன் இருந்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே துணை காவல் ஆணையர் ஹரேந்திர சிங் கூறும்போது, டெல்லியின் மாண்டவாலி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ரயில் மோதி ஒரு பெண் உட்பட இரண்டு பெண் குழந்தைகள் உடல்கள் சிதறி கிடப்பதாக அதிகாலை 3.40 மணி அளவில், ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு போலீசார் சென்று பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 2 பெண் குழந்தைகளும் ரயில் மோதி சடலமாக கிடந்துள்ளனர். அப்போது, சடலத்திற்கு அருகில் கண்ணீருடன் 1 வயது குழந்தை ஒன்று இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவில், குழந்தை இருப்பது காணப்பட்டதுடன், அருகில் இருப்பவர், குழந்தை நலமுடன் உள்ளதா? குழந்தைக்கு காயம் உள்ளதா? என்கிறார். இதைத்தொடர்ந்து, அந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது, குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிகிறது.
இந்த விபத்து நடந்த பகுதியின் அருகில் கிடந்த செல்போன், உயிரிழந்தவர்கள் யார் என்பதை கண்டறிய உதவியுள்ளது. உயரிழந்த அந்த 30 வயது பெண், கிரண் என்றும் மாண்டேவாலி பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, நடந்த விசாரணையில், அந்த பெண் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக குழந்தைகளுடன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஆட்டோ ஓட்டுனரான அந்த பெண்ணின் கணவர், நேற்று மாலை வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்த மனைவியும், குழந்தைகளும் மாயமாகியுள்ளனர்.