டெல்லி ஷாகின் பாக் போராட்டக்காரர்கள் 101 நாட்களுக்கு பின்னர் அகற்றப்பட்டனர்.
ஹைலைட்ஸ்
- டெல்லி ஷாகின் பாக் போராட்டக்காரர்கள் 101 நாட்களுக்கு பின்னர் அகற்றம்
- வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
- டெல்லியின் பல்வேறு பகுதியில் நடந்து வந்த போராட்டங்களும் அகற்றம்
New Delhi: வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை இன்று காலை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் சிஏஏ போராட்டம் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஷாகின் பாக் போராட்டம் நடைபெறும் இடத்தை போலீசார் இன்று காலை 7 மணியளவில் சூழ்ந்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லும்படி போலீசார் பலமுறை வலியுறுத்திய போதிலும், அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். இதையடுத்து, சுமார் 7.30 மணி அளவில் போராட்டக்காரர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 144 பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும் கூட்டமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும், தொடர்ந்து, ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் ஒருவர் கூறினார்.
தொடர்ந்து, சிஏஏவுக்கு எதிராக ஜாஃபர்பாத், டர்க்மன் கேட் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதியில் நடந்து வந்த போராட்டங்களும் அன்று காலை அகற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாடு தழுவிய கட்டுப்பாடுகளை விதித்ததன் ஒரு பகுதியாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியை முடக்குவதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்புக்கு 9 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மாலை 30 மாநிலங்கள் அதிரடியாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக இந்தியாவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதித்து கடுமையாக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அத்தோடு, இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.