அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘தென் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில், குறைந்த காற்றழுத்த நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டியில் 10 சென்டி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையைப் பொறுத்தவரை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்துவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு, 31 சென்டி மீட்டர். இந்தக் காலக்கட்டத்தின் சராசரி அளவு 35 செ.மீ ஆகும். இது இயல்பைவிட 12 சதவிதம் குறைவு' என்று கூறினார்.