2016ல் மோடி அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
New Delhi: பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு, பொருளாதாரத்தை அழித்துவிட்டது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி எவ்வித முன்னறிவிப்பின்றி, திடீரென நாட்டில் புழக்கத்தில் இருந்த 90 சதவீத ரூபாய் நோட்டுகளான ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ரொக்கமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்துள்ளவர்கள் உடனே வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கணக்கில் வராமல் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் சிக்குவார்கள் என்றும் தெரிவித்தார். சில மாதங்கள் மக்கள் இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று அப்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. குறிப்பாக, முன்பு இருந்ததைவிட பொருளாரம் மிகவும் மோசமான நிலைமையை அடைந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இது தொடர்பாக தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 3 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இது பேரழிவு என்பதை நிரூபித்து, நமது பொருளாதாரத்தை அழித்துவிட்டது. அனைத்து தீமைகளையும் அழித்தவர் என புகழந்துரைத்த ஒவ்வொருவரின் கூற்றும் அவர்களது தலையிலே பேரிடியாக விழுந்தது என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு யாரேனும் பொறுப்பேற்க விரும்புகிறீர்களா? என்று அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார். #DeMonetisationDisaster என்ற ஹேஷ்டேக்குடன் பிரியங்கா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.