3 வங்கிகளை இணைப்பதற்கு தேவையான நிதியை அறிவித்துவிட்டதாக அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- நாட்டின் வங்கி முறையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை
- இணைக்கும் முயற்சிக்கு 3 வங்கிகளின் ஒப்புதல் தேவை
- இந்தாண்டு இறுதிக்குள் இணைப்பு நடவடிக்கை முடிய வாய்ப்பு
New Delhi: நாட்டின் வங்கி முறையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, தேனா, விஜயா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய 3 வங்கிகளை ஒன்றிணைத்து நாட்டிலேயே 3-வது மிகப்பெரும் வங்கியை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு தேவையான நிதி அனைத்தும் வழங்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், நிதித்துறை செயலாளர் ராஜிவ் குமாரும் இந்த தகவலை தெரிவித்தனர். நாட்டின் வாராக்கடன் ரூ. 8.99 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், இத்தகைய ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இணைப்பு நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட 3 வங்கிகளின் இயக்குனர் குழுமத்துக்கு திட்ட மாதிரி அனுப்பி வைக்கப்படும். அதற்கு ஒப்புதல் கிடைத்த பின்னர், இணைப்பு நடவடிக்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.
இந்த நிதியாண்டு இறுதிக்குள் 3 வங்கிகளை இணைக்கும் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் வாராக்கடன் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மத்திய அரசு கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. இதனால் வங்கித்துறையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது நாட்டிலேயே மிகப்பெரும் வங்கியாக எஸ்.பி.ஐ. செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக எச்.டி.எஃப்.சி., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. தனியார் வங்கிகள் உள்ளன.