This Article is From Oct 24, 2018

‘டெங்கு பாதிப்புக்கு என்ன செய்தீர்கள்..?’- தமிழக அரசைத் துளைக்கும் அன்புமணி

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு அனைத்துக்கட்ட நடவடிக்கையையும் எடுக்கும் என்று தெரிவித்தனர்.

‘டெங்கு பாதிப்புக்கு என்ன செய்தீர்கள்..?’- தமிழக அரசைத் துளைக்கும் அன்புமணி

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘டெங்கு காய்ச்சலை பரவலைத் தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘மழைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், காய்ச்சல் பரவுவதைத் தடுக்க இந்த அரச ஆயத்தமாகி இருக்க வேண்டும். ஆனால், எதனால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவுகிறது என்பதைக் கூட சரியாக ஆய்வு செய்யாமல் இருக்கிறது தமிழக அரசு. டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது மாநில அரசு. இதற்கு முன்னரும் சரி இப்போதும் சரி, டெங்கு காய்ச்சல் பரவலைப் பொறுத்தவரை தமிழக அரசு சரியான பாதையில் பயணித்ததில்லை.

கடந்த ஆண்டு மட்டும் 600 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறந்தனர். அப்படி இருந்தும் இந்த அரசு சரியான பாடம் கற்கவில்லை. தொடர்ந்து மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

நேற்று சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து, டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு அனைத்துக்கட்ட நடவடிக்கையையும் எடுக்கும் என்று தெரிவித்தனர்.

.