தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, மே.22ம் தேதியான அன்று பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.
அப்போது, அந்தப் பேரணி பெரும் வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறிய நீதிமன்றம், 815 பக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணிக்கு முழு தீர்ப்பும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, மேல்முறையீடு செய்யும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேந்தா நிறுவனம் கோரியதையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்த வழக்கில் வைகோ, முத்துராமலிங்கம், வைகை, யோகேஷ்வரன், பூங்குழலி, அப்துல் சலீம், மாசிலாமணி, சி.எஸ்.வைத்தியநாதன், மோகன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்களும் பொறுமையாக வாதாடியதற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.