ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி மறுப்பு: மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு: மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறிய நீதிமன்றம், 815 பக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணிக்கு முழு தீர்ப்பும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ள மகத்தான- மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் தீர்ப்பாகும்.
சுற்றுப்புறச்சூழலுக்கும் – தங்களின் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக இருந்த ஆலையை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களை கொடூரமாகப் பறித்த அதிமுக அரசின் மாபாதகச் செயலை தமிழக மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை நியாயம் கிடைக்காதது வேதனையளிக்கிறது. தாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதி ஆகிவிடும்.
அதிமுக அரசே மனித நேயமற்ற முறையில் துப்பாக்கிச் சூடு மூலம் படுகொலைகள் நடத்தினாலும், உயர்நீதிமன்றம் இன்றைக்கு மக்களின் பக்கம் நின்று, இந்த மனித நேயத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மக்கள் நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், நீதித்துறை வைத்துள்ள நன்மதிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தி, போராடியவர்களைக் கொன்று விட்டு- பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பால்- வேறு வழியின்றி, ஒரு அரசு ஆணை மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அதிமுக அரசு. மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி- ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை அமைச்சரவையில் ஒரு தீர்மானமாகவே கொண்டு வந்து நிறைவேற்றி- அதை ஒரு சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.