ஓபிசிக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பிரதமருக்கு ராமாதஸ் கடிதம்!
ஹைலைட்ஸ்
- இட ஒதுக்கீடு உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
- ராமதாஸ் இன்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்
- பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது
மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, ஓபிசி வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் நகலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அனுப்பியுள்ளார். அதில், இந்தியாவின் பிரதமராகிய தாங்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும், உங்களால் அவர்களுக்கு நீதி பெற்றுத் தர முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு நான் எழுதுகிறேன்.
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து, மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 'அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று ஆணையிட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்களும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15% இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம்தான் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு உருவாக்கப்படுகிறது.
அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள்தான் எனும்போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்கும். மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 11 ஆயிரம் மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் பயிலும் வாய்ப்புகளை இழந்து விட்டனர். 35 ஆண்டுகளாக உரிமைகளை இழந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது. அதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.