நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், ஃபட்னாவிஸ் மற்றும் மகாராஷ்டிர பாஜக முக்கிய நிர்வாகிகளிடம் பேசியுள்ளதாகத் தெரிகிறது.
Mumbai: மகாராஷ்டிர முதல்வராக கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்ற தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஃபட்னாவிஸ், சிவசேனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். முன்னதாக மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றிருந்த தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஃபட்னாவிஸ், “பாஜக-வும் சிவசேனாவும் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்தன. ஆனால், நாங்கள்தான் 70 சதவிகித இடங்களில் வெற்றி பெற்றோம். மக்கள் எங்களுக்குச் சாதகமாகத்தான் வாக்களித்துள்ளனர். தேர்தலுக்கு முன்னர் எங்களிடம் பேசிய சிவசேனா, யார் முதல்வர் பதவி கொடுக்கிறார்களோ அவர்களுடன் சென்றுவிடுவோம் என்று சொன்னது.
நாங்கள் சிவசேனாவுக்காக வெகு நாள் காத்திருந்தோம். அவர்கள் எங்களிடம் பேசாமல், காங்கரிஸ் - தேசியவாத காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினர். யார் ஆட்சியமைத்தாலும் அவர்களுக்கு வாழ்த்துகள். யார் ஆட்சியைப் பிடித்தாலும் அது நிலையானதாக இருக்காது. காரணம், அவர்களுக்கு உள்ளேயே கொள்கை வேறுபாடுகள் அதிகம் இருக்கும்.
சிவசேனாவின் பதவி ஆசை எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், சோனியா காந்தியுடன் கூட்டணி வைக்கக் கூட அவர்கள் தயாராகிவிட்டார்கள். அமையவுள்ள 3 சக்கர அரசு, நிலையானதாக இருக்க வாய்ப்பில்லை. பாஜக, நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட்டு, மக்களின் குரலை எதிரொலிக்கும்,” என்று கூறினார்.
மகாராஷ்டிர சட்டசபையில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இன்று காலை உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், ஃபட்னாவிஸ் மற்றும் மகாராஷ்டிர பாஜக முக்கிய நிர்வாகிகளிடம் பேசியுள்ளதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தையின்போது, பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டுமா, அல்லது முதல்வர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா என்பது குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்துதான் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளது.