New Delhi: நேற்று நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 5 மனித உரிமை செயற்பாட்டளர்களை கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைதுக்கு பல்வேறு காரணம் சொல்லப்பட்டு வரும் நிலையில், இன்று அவர்களின் கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் புனே காவல் துறை வட்டாரம் நம்மிடம் பகிர்ந்துள்ள தகவல்படி, ‘கைது செய்யப்பட்டவர்கள் பெரிய சதித் திட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்’ என்று சொல்லப்படுகிறது.
ஆனால், அது என்ன சதித் திட்டம் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
கைது செய்யப்பட்டவர்களை, கடந்த ஒரு வாரமாக புனே போலீஸ் கவனமாக கண்காணித்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், அவர்களுக்கு எதிராக கிடைத்த ‘புதிய ஆதாரம்’ குறித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு தெரியபடுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அது என்ன புதிய ஆதாரம் என்பதும் தெரியவில்லை.
அதே நேரத்தில், நேற்று செயற்பாட்டளர்களை கைது செய்யப்பட்டவுடன், ‘பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதற்காகத் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. அது உண்மை இல்லை என்றும் புனே போலீஸ் மறுத்துள்ளது.
மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவால்கா, வெர்னன் கோன்சால்வேஸ் ஆகியோர்தான் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்.
கடந்த ஜூன் மாதம் 5 செயற்பாட்டளர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என போலீஸ் தரப்பு சொல்கிறது.
1818இல் மராத்தா பேஷ்வாக்களுடன் நடந்த போரில் வென்றதன் 200வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இருந்து தலித் மக்கள் பீமா கோரேகானில் டிசம்பர் 31 அன்று கூடினர். ஜனவரி ஒன்றாம் தேதி தலித் செயற்பாட்டாளர்களுக்கும் மராட்டிய சாதி இந்துக்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார். இந்த கலவரத்துக்கு காரணமானவர்கள் என்று கூறித்தான், ஜூன் மாதம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
‘கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தற்போது கைது செய்யப்படவர்களுக்கும் இடையில் பகிரப்பட்ட மின்னஞ்சல்களே, தொடர் கைது நடவடிக்கைக்குக் காரணம்’ என்றுள்ளது போலீஸ்.
பரபரப்பான இந்த கைதுகள் குறித்து அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.