This Article is From Nov 06, 2019

மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி: பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ்!

Maharashtra government: மகாராஷ்டிராவில் கடந்த அக்.24ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 50:50 அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் சிவசேனா உறுதியாக இருந்த வருவதால், தற்போது வரை அங்கு ஆட்சி அமையாமல் இழுபறி நீடித்து வருகிறது.

ஆர்எஸ்எஸ்-ன் தலைவர் மோகன் பகவத்தை சந்திக்க நாக்பூர் சென்றுள்ளார் ஃபட்நாவிஸ். . (File)

Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான இறுதி கெடு நெருங்கும் நிலையில், முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைவர் மோகன் பகவத்தை சந்திக்க நாக்பூர் சென்றுள்ளார். 

மகாராஷ்டிராவில் கடந்த அக்.24ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா இடையே தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நடந்து வருகிறது. 50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது. 

தொடர்ந்து, தனது முடிவில் இருந்து சிவசேனாவும் பின்வாங்க மறுத்து வருகிறது. மேலும், 2014ல் பாஜகவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்தோம், இந்த முறை அவ்வாறு இருக்க முடியாது என்று சிவசேனா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. 

இதனிடையே, இந்த விவகாரத்தில் சிவசேனா ஆர்எஸ்எஸ் தலையீட்டை எதிர்நோக்கியது. இதுதொடர்பான சிவசேனா மூத்த தலைவர் கிஷோர் திவாரி எழுதியுள்ள அந்த கடிதத்தில், கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்த நிலையிலும், பாஜக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க மறுத்து வருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தாமதமாகி வருகிறது. இதனால், ஆர்எஸ்எஸ் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து இன்று முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது. 

மகாராஷ்டிர தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 105 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, தங்களிடம் 115 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்து வருகிறது. 56 தொகுதிகளை கைப்பற்றிய சிவசேனா 63 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 102 இடங்கள் உள்ளன. 

.