நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
தனுஷ் ஹாலிவுட் என்ட்ரி கொடுத்த முதல் திரைப்படம் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’. இந்தப் படம் உலகம் முழுவதும் இருக்கும் பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. கென் ஸ்காட் இயக்கிய இந்தப் படத்துக்கு, உலகின் பல இடங்களில் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.
நார்வே திரைப்பட விழாவிலும், ஜர்னி ஆஃப் பகீர் திரையிடப்பட்டது. இந்நிலையில் அந்த விழாவில் ‘ரே ஆஃப் சன்ஷைன்’ என்ற விருதை இப்படம் வாங்கியுள்ளது. இது குறித்து கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நார்வே திரைப்பட விழாவில், தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பகீர் ‘ரே ஆஃப் சன்ஷைன்’ விருதை வென்றுள்ளது. இந்த விருது வழங்கிய விழாவின் ஜூரி, ‘இப்படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் மனித மாண்பு குறித்து மிக நேர்த்தியாக சொல்லப்பட்டு இருக்கிறது’ என்று கூறினார்கள்’ என்று நெகிழ்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.