Read in English
This Article is From Apr 11, 2020

பல்லாயிரம் கோடி பணமோசடி புகாரில் DHFL புரோமோட்டர்ஸ்… லாக்டவுனில் சுற்றுலா... சிக்கயது எப்படி?

கபில் மற்றும் தீரஜ் மீது சிபிஐ ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

யெஸ் வங்கி மற்றும் டி.எச்.எஃப்.எல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ள 14,000 கோடி ரூபாய் மோசடிப் புகார்களில் அவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Highlights

  • மகாபலேஷ்வரில் உள்ள பண்ணை வீட்டில் கபில், தீரஜ் கைதுப
  • ஊரடங்கை மீறி குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளனர் கபில் மற்றும் தீரஜ்
  • தங்களையும் சேர்த்து 23 பேரை அழைத்துச் சென்றுள்ளனர் கபில் மற்றும் தீரஜ்
Mumbai:

மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டாராவில் உள்ள சுங்கச்சாவடியின் சிசிடிவி கேமராக்கள், கடந்த புதன் கிழமை மதியம், 5 எஸ்.யூ.வி கார்கள் மின்னல் வேகத்தில் பறந்ததைப் பதிவு செய்தன. அந்த கார்களுக்கு உள்ளே 23 பேர். பெரும்பான்மையானோர் கோடீஸ்வர ‘வதாவன் குடும்பத்தை' சேர்ந்தவர்கள். அதில் முக்கியமான இருவரும் இருந்தனர். DHFL நிறுவனத்தின் புரோமோட்டர்களான தீரஜ் வதாவன் மற்றும் கபில் வதாவன் ஆகிய இருவர்தான் அந்த முக்கியப் புள்ளிகள். பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடிப் புகாரில் சிக்கித் தவிக்கும் DHFL நிறுவனத்தின் புரோமோட்டர்களான இவர்களை, தன் பிடிக்குள் கொண்டு வர சிபிஐ வெகு நாட்களாக முயன்று வருகிறது.

சில வாரங்களுக்கு முன்னர், தீரஜுக்கும் கபிலுக்கும் பண மோசடிக்கான விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியபோது, இருவரும், “கொரோனா பரவல் இருப்பதனால் எங்களின் ஆரோக்கியம்தான் இப்போதைக்கு முக்கியம்,” என்று அரசு தரப்புக்கு பதில் அனுப்பியது. 

அந்த ‘ஆரோக்கியம்தான் அதி முக்கியம்' என்கிற கூற்றை அவர்கள் மறந்துவிட்டு, கந்தாலாவில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து மகாபலேஷ்வரில் உள்ளப் பண்ணை வீட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்த சமயத்தில் அவர்கள் இப்படி சுற்றித் திரிந்தது வெளியே தெரிந்தது. சுற்றி வளைத்தது போலீஸ் தரப்பு. சிபிஐ வளையத்திற்குள் தற்போது அவர்கள் வந்துவிட்டனர்.

Advertisement

கந்தாலாவிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணை வீட்டுக்கு, சமையல்காரர்கள், பணியாட்களுடன் சென்றுள்ளனர் வதாவன் குடும்பத்தினர். அவர்களிடம் ஐபிஎஸ் அதிகாரியும், மாநில உள்துறை அமைச்சகத்தின் செயலராகவும் இருந்த அமிதாப் குப்தா கொடுத்த அனுமதிச் சீட்டு இருந்துள்ளது. வதாவன் குடும்பத்திற்குத் தான் கொடுத்த கடிதத்தில், “குடும்ப அவசரத்துக்காக” பயணப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் அமிதாப். 

அந்த கடிதத்தில் மேலும், “இந்த கடிதம் வைத்திருப்போர் எனக்கு நன்கு பரிட்சியமான குடும்ப நண்பர்கள். அவர்கள் கந்தாலாவிலிருந்து மகாபலேஷ்வருக்கு குடும்ப அவசரத்துக்காகச் செல்கின்றனர்… எனவே, அவர்கள் பயணப்பட நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டு, மொத்தமாக எத்தனை பேர் பயணப்படுகிறார்கள் என்று தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அமிதாப், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். 

Advertisement

கபில் மற்றும் தீரஜ் மீது சிபிஐ ‘லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. யெஸ் வங்கி மற்றும் டி.எச்.எஃப்.எல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ள 14,000 கோடி ரூபாய் மோசடிப் புகார்களில் அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது, பண்ணை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் வதாவன் குடும்பத்தினர் தனிமையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. 

Advertisement