தற்போது பாதிக்கப்பட்டுள்ள அந்த 8 இந்தியர்களை தவிர வேறு எந்த இந்தியரும் கொரோனாவால் அங்கு பாதிப்படையவில்லை
ஹைலைட்ஸ்
- இந்தியா ஏன் இன்னும் தன்னை மீட்க தாமத படுத்துகிறது
- 'எனது மகளை மீட்டு தாருங்கள்' - மோடிக்கு கடிதம் எழுதிய தந்தை
- துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'டைமோண்ட் பிரின்சஸ்'
Kolkata: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா காரணமாக உலக நாடுகளில் உள்ள மக்கள் பல வகைகளில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் 'டோக்கியோ' அருகே யோகோஹமா என்ற துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'டைமோண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பலில் சிக்கியுள்ள தனது மகள் சோனாலி தாக்கரை மீட்டுத் தருமாறு தினேஷ் தாக்கர் என்பவர் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தனது மகள் ஒரு சிறிய அறைக்குள் இருப்பதாகவும், மேலும் அவருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தின் நகலைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஒரு இந்தியக் குடிமகனாகப் பிரதமருக்குக் கடித்த எழுதியுள்ள அவர், தனது மகளை மீட்டுத் தரவேண்டும் என்றும். சுமார் 630 கொரோனா பாதித்த பயணிகளுடன் ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் சொகுசு கப்பலில் இருக்கும் தனது மகள், ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான சோனாலி தாக்கர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி முதல் அந்த கப்பலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜன்னல்கள் இல்லாத அந்த குறுகிய அறைக்குள் இருந்து NDTVயுடன் பேசிய அவர், அமெரிக்கா போன்ற பிற நாடுகள் தங்கள் நாட்டுப் பயணிகளை மீட்டுச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியா ஏன் இன்னும் தன்னை மீட்கத் தாமதப் படுத்துகிறது என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அந்த சொகுசு கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் உடல்நிலை தேறி வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 3ம் தேதி முதல், டோக்கியோ அருகே யோகோஹமா என்ற துறைமுகத்தில் சுமார் 3,711 (138 இந்தியர்கள்) பயணிகளுடன் நிற்கிறது அந்த சொகுசு கப்பல். இதுகுறித்து இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், தற்போது பாதிக்கப்பட்டுள்ள அந்த 8 இந்தியர்களைத் தவிர வேறு எந்த இந்தியரும் கொரோனாவால் அங்குப் பாதிப்படையவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.