அணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அனைத்து மதத்தினரும் நாட்டுக்காக மழை வேண்டி பிரார்த்தனை செய்ததை போலவே, இந்து சமய கோயில்களிலும் வழிபாடு நடக்கிறது.
இந்து சமய கோயில்கள் அரசின் கட்டுப்பட்டில் இருப்பதால், மழை வேண்டி வழிபாடு நடந்த வேண்டியது அரசின் கடமை. அரசு தான் யாகம் செய்ய முடியும். சாதாரண மனிதர்கள் கோயில்களில் யாகம் செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தை பொறுத்தவரை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காது என்றும் தடீர் விஞ்ஞானிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா? பிழைப்புக்காக நேற்று முளைத்த அரசியல் விஞ்ஞானிகள் தான் அணுமின் நிலையம் வேண்டாம் என்று கூறுகின்றனர்.
அயல் நாட்டின் கைக்கூலிகள் விஞ்ஞானிகளாக மாறக்கூடியதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு முன்னோக்கி சென்றாக வேண்டும். அந்த கழிவுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என்றால் எந்த காரணத்தை கொண்டும் கழிவுகளை அங்கு வைப்பதற்கு அரசாங்கம் முன்வராது, அந்த நிறுவனமும் வராது என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், சுகாதார துறையில் சிறப்பாக இயங்கும் மாநிலங்களை நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ளது. அதில், மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது ஒன்பதாவது இடத்துக்கு பின் தங்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு விஷயத்திற்கும் நிகழ்காலத்தை மட்டும் பார்க்கக்கூடாது. 50 ஆண்டுகளாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு திமுகதான் காரணம். சுகாதாரத்துறையில் தமிழகம் பின் தங்கியதற்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். அனைத்திற்கும் காரணமான திமுக இன்று போராட்டம் நடத்துகிறது. இவை எல்லாம் சரிசெய்யக்கூடிய விஷயம் தான் என்று அவர் கூறியுள்ளார்.