“அமித்ஷா, எங்களின் 50:50 ஒப்பந்தத் திட்டத்தைப் பற்றி பிரதமர் மோடியிடம் சரியான நேரத்தில் சொல்லியிருந்தால்... - Shiv Sena
Mumbai: மகாராஷ்டிராவில் (Maharashtra) குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) அமலாகியுள்ள நிலையிலும், ஆட்சியமைப்பது குறித்து தொடர்ந்து பலகட்ட அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. சிவசேனா (Shiv Sena), பாஜக-வுடன் (BJP) கூட்டணியை முறித்ததில் இருந்து, மிகவும் கறார் கருத்துகளை தெரிவித்து வருகிறது. மகாராஷ்டிர அரசியல் குழப்பம் பற்றி நேற்று, பாஜக-வின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா (Amit Shah) முதன்முறையாக வாய் திறந்தார். அதற்கு சிவசேனா, தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
சிவசேனாவின் முக்கிய நிர்வாகியான சஞ்சய் ராவத், “அமித்ஷா, எங்களின் 50:50 ஒப்பந்தத் திட்டத்தைப் பற்றி பிரதமர் மோடியிடம் சரியான நேரத்தில் சொல்லியிருந்தால், தற்போது நிலவும் பிரச்னை இருந்திருக்காது. அமித்ஷா, அந்தத் திட்டத்தை மோடியிடம் சொல்லாததே இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம்.
பிரசாரங்களின் போதும், பிரதமர் மோடி, தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் முதல்வராக தொடர்வார் என்று கூறியபோது, அதை ஒரு அரசியல் சமிக்ஞையாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை.
தொகுதி பங்கீடு மற்றும் பிற கூட்டணி ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்படாமலேயே இருந்ததோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது,” என்று பகிரங்க குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார்.
முன்னதாக அமித்ஷா, “தேர்தலுக்கு முன்பாக நானும், பிரதமர் மோடியும் பிரசாரம் மேற்கொண்டோம். மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவீஸ் மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்பார் என்று கூறினோம். அப்போதெல்லாம் எங்களது பிரசாரத்திற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது புதிய கோரிக்கைகளுடன் அவர்கள் பிரச்னையை கிளப்பியுள்ளனர். சிவசேனா முன் வைக்கும் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை,” என்று கூறினார். அதற்குத்தான் சிவசேனா, தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கூட்டு வைத்திருந்த பாஜக - சிவசேனா, அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியை முறித்துக் கொண்டன. தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவைக் கோரியது. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே, மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது. தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
(With inputs from PTI)